July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பாடசாலைகள் திறப்பதற்கு முன்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட தீர்மானம்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசிகளை செலுத்துவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.மேலும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஏற்கனவே சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

“ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செலுத்துவதற்கு தடுப்பூசிகளை கோரியுள்ளோம்.இருப்பினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரும், பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பும் தடுப்பூசி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவ நிபுணர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவிக்கையில்;

தடுப்பூசி போடுவதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, ​​சிறுவர்களுக்கும் அந்த முன்னுரிமையை வழங்க வேண்டும். ஏனெனில் சிறுவர்கள் தங்கள் தாத்தா ,பாட்டிகளுக்கு வைரஸை பரப்ப கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

இலங்கை மக்கள் தொகையில் 1.6 வீதமானவர்கள் இரண்டு டோஸ்களையும் 7 வீதமானோர் ஒரு டோஸையும் பெற்றுள்ளார்கள். 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களின் இறப்பு விகிதம் சிறுவர்களை விட 50 முதல் 100 மடங்கு அதிகம் என்பதால் இறப்புகளைத் தடுப்பதற்காக வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மக்கள் தொகையில் 25 வீதம் அல்லது சற்றே அதிகமாக சிறுவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் நோயைப் பரப்பக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கின்றன.

சிறுவர்களுக்கான உரிமம் பெற்ற ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி ஜூலை அல்லது அடுத்த மாதமளவில் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.எனவே சிறுவர்களுக்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, லிதுவேனியா, இத்தாலி, எஸ்டோனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகள் இந்த மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்தியுள்ளன.அதேபோல்,ஆசியா மற்றும் மத்திய கிழக்கில், இஸ்ரேல், துபாய், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,சிங்கப்பூர், ஜப்பான், பிலிப்பைன்ஸ்,ஹொங்ஹொங் ஆகிய நாடுகள் ஏற்கனவே தடுப்பூசி போட தொடங்கியுள்ளன.வட அமெரிக்காவில், அமெரிக்காவும் கனடாவும் மே மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்யுள்ளன.இந்த நாடுகள் அனைத்தும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.