இலங்கையில் இன்று (03) கொரோனாவால் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,608 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் இன்று (03) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3,297 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 195,844 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான 33,447 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 31,839 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இன்று (03) மேலும் 1,683 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 162,397ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 50,000 சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
எனினும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் 300,000க்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் தேவைப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் இதுவரை 1834528 பேருக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன், 352598 பேருக்கு 2 ஆவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.