
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக பாதிப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் உள்ள மீன்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நஞ்சு பொருட்கள் இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக பாதிப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதில் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களும் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அந்த பகுதிகளில் இருந்து மீன்கள் சந்தைக்கு வராது என்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த கூறியுள்ளார்.
எனினும் குறித்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பயண கட்டுப்பாட்டுக்கு மத்தியில் நடமாடும் வியாபாரிகள் ஊடாக மீன் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக இலங்கையின் மீன்வளம் மற்றும் கடல் சார் சூழலுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.