January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் மரணம்: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!

மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் ஐஸ் போதைப் பொருள் அடங்கிய நான்கு பக்கற்றுகளை விழுங்கியிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

25 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தின் சிறைக்குள் வைக்கபட்டிருந்ததாக கூறப்படும் குறித்த இளைஞன் இன்று அதிகாலை மயக்கமடைந்திருந்ததாகவும், இதன்போது அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இளைஞன் பொலிஸாரின் தாக்குதலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணையும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில், குறித்த இளைஞன் ஜஸ் போதைப் பொருள் அடங்கிய நான்கு பக்கற்றுகளை வாயில் போட்டு விழுங்கியிருந்துள்ளதாகவும், இது நெஞ்சுப் பகுதியில் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.