(photo : facebook /Lasa)
உனவட்டுன கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆமையின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆராயுமாறு அத்திட்டிய வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு காலி மேலதிக நீதவான் சஞ்சீவ பத்திரண உத்தரவிட்டுள்ளார்.
ஆமையின் மரணம் குறித்து ஹிக்கடுவ வனஜீவராசிகள் காரியாலயத்தினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்தபோது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கையின் கடற்பரப்பில், எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதையடுத்து கடல்வாழ் உயிரினங்கள் பல உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
இதற்கமைய, குறித்த ஆமையின் மரணத்திற்கு தீப்பற்றிய எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயனங்கள் காரணமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து இது குறித்து ஆராயுமாறு காலி மேலதிக நீதவான் சஞ்சீவ பத்திரண உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்தோடு உயிரிழந்த ஆமையின் உடலை, சோதனைகளை மேற்கொள்வதற்காக அத்திட்டிய வனஜீவராசிகள் கால்நடை மருத்துவ அலுவலகத்திற்கு அனுப்புமாறும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.