November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொழும்பு மாவட்டத்தில் நேற்று 501 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 50,884 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் (02) அடையாளம் காணப்பட்ட 3 ஆயிரத்து 306 கொரோனா நோயாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

அதனடிப்படையில் இம்மாவட்டத்தில் 1004 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணித்தியாலத்தில் மாவட்டமொன்றில் ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில், 35 ஆயிரத்து 340 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, நேற்றைய தினம் (02)பதுளை, களுத்துறை, குருநாகல், கேகாலை, அனுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 100 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரையில் 191,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 160,714 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இவர்களில் 1,527 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.