January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமது உற்பத்தி பொருளில் தமிழ் மொழியில் பெயரிடப்படாமை குறித்து ஃபொன்டெர்ரா நிறுவனம் விளக்கம்!

இலங்கையில் சிங்களம், சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்ட ‘அங்கர் பட்டர்’ சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதில்  தமிழ் மொழியில் பெயரிடப்படாதது ஏன் எனவும்  கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து, ‘அங்கர் பட்டர்’ விநியோகஸ்தர்களான ஃபொன்டெர்ரா பிரேன்ட் லங்கா நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமையவே “அங்கர் பட்டர்” பெயரிடப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நியூசிலாந்திலிருந்து வரும் “அங்கர் பட்டர்” பல நாடுகளுக்கு விநியோகிக்கும் ஒரு சந்தை தயாரிப்பு ஆகும்.இது கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளுக்கு தயாரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது” என குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ஒவ்வெரு தொகுதியிலும் அந்தந்த நாடுகளில் பொதுவாக பேசப்படும் மொழியில் பெயரிடப்படுவதுடன் தாம் பன்முகத்தன்மையை மதிப்பதாகவும் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஃபொன்டெர்ரா  பிரேன்ட் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, “அங்கர் பட்டர்” தயாரிப்பில் பெயரிடப்பட்டுள்ள மொழிகள் குறித்து இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறு முறைப்பாடு அளிக்கப்படும் பட்சத்தில் இது குறித்து ஆராயலாம் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அங்கர் பட்டர் விநியோகஸ்தர்களான ஃபொன்டெர்ரா பிராண்ட்ஸ் லங்கா நிறுவனம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தைப்படுத்தப்படும் அனைத்து உணவு பொருட்களிலும் மூன்று மொழிகளிலும் விளக்கத்தை சேர்ப்பதை நடைமுறைப்படுத்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் துஷான் குணவர்தன கூறியுள்ளார்.

“சிறிய பாக்கெட்டுகளில் ஒன்று மூன்று மொழிகளிலும் விளக்கம் இருந்தால், அதனை யாராலும் வாசிக்க முடியாது என கூறியுள்ள அவர், வெளிநாட்டு உற்பத்திகள் உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்படும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 10 (1) (அ) இன் கீழ், உள்ள விதிகளுக்கு அமைய “அங்கர் பட்டர்” பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் “சிங்கள மற்றும் தமிழ் மொழிகளை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் அரபி மொழிகளில் பெயரிடப்பட்ட சில தயாரிப்புகள் உள்ளன” என்றும் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.