File Photo
பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த நேரத்தில் யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர் குழுவொன்றால் பிரதேச மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முகங்களைத் துணிகளால் முழுமையாக மறைத்தவாறு கோடாரி, கத்திகளுடன் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் உள்நுழைந்த கொள்ளையர் குழு வீட்டில் உறக்கத்திலிருந்தவர்களைக் கடுமையாகத் தாக்கியும், அச்சுறுத்தியும் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தரோடை மேற்கு சங்காவத்தை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த கணவனையும், மனைவியையும் தட்டி எழுப்பியுள்ளனர்.
பின்னர், அவர்களை அங்கிருந்து எழும்பக் கூடாது எனக் கணவனைக் கோடாரியாலும், தென்னை மட்டையாலும் தாக்கியுள்ளதுடன் அவரது மனைவியையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் வீட்டில் இருந்த மற்றையவர்களையும் அந்த நபர்கள் தாக்கியுள்ளதுடன், அங்கு பெண்ணொருவர் அணிந்திருந்த பெறுமதியான நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது வீட்டில் இருந்தவர்களின் கைத் தொலைபேசிகளையும் பறித்துள்ள அவர்கள் அதனை வெளியில் இடமொன்றில் வீசிச் சென்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகத்தின் பேரின் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பிரதேச மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.