July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு மாகாணத்திற்கு விரைவாக தடுப்பூசிகளை பங்கிடுமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை பங்கிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.ஆர்.எம். தௌபீக் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றுவதற்கான நடவடிக்கை இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என சுகாதார தரப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தடுப்பூசிகளை பங்கிடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

மேலும், கடந்த வாரத்தில் மாத்திரம்  திருகோணமலை மாவட்டத்தில் 450 தொற்றாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 712 வைரஸ் தொற்றாளர்களும், அம்பாறை மாவட்டத்தில் 335 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாக  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இவ்வாறான நிலையில் உடனடியாக மக்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை சுகாதார அமைச்சிற்கும் நாம் கோரிக்கையாக முன்வைத்துள்ளோம்.

எனினும் தற்போது வரையில் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் வைத்தியர் தௌபீக் இதன்போது உறுதிப்படுத்தினார்.

இதேவேளை ‘கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில்  வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் பாரிய பின்னடைவை கண்டுள்ளதாகவும், மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.