November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து வேறு உள்நோக்கம் கொண்டதா?: ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம்

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து வேறு உள்நோக்கங்களைக் கொண்டதா? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அவர் ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் விபத்தை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த பல்வேறு வாய்ப்புகள் இருந்தும், தவறவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் கட்டார் துறைமுகங்கள் அனுமதி மறுத்த நிலையில், கப்பலை இலங்கைக்கு வர அனுமதித்தது யார் என்றும் வஜிர அபேவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆபத்து விளைவிக்கும் நச்சுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டுவரும் தேசிய நிறுவனம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

கப்பலில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட இரசாயன கசிவு கொழும்பு துறைமுகத்துக்கு அறிவிக்கப்பட்டதா? அறிவித்த பின்னரும் இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்பட்டதா? போன்ற சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தேசியக் கட்சியின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

“எதனையும் ஆராயாமல் கப்பல் நாட்டுக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் இருக்கின்றதா என்பதையும் கூற முடியாதுள்ளது.

ஒரு கொள்கலனில் தீப்பரவல் ஏற்பட்டபோதே, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

கப்பலின் இயந்திரத்தில் கோளாறு இருக்கவில்லை. எனவே, காற்று வீசும் திசையைப் பார்த்து, கப்பலைத் திருப்பியும் தீப்பரவலை கட்டுப்படுத்தி இருக்கலாம்” என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.