January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.குடாநாட்டில் அதிகரித்துவரும் திருட்டினை கட்டுப்படுத்த பொலிஸாரால் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் வீதிகளில் பொலிஸாரின் சுற்றுக்காவல் நடவடிக்கை புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.குடாநாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் அணியினர் மாலை வேளைகளில் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக பயணிப்போரை சோதனையிட்டதுடன், பயணிக்கும் வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தினர்.

மேலும்,அத்தியாவசிய சேவை தவிர்ந்து தேவையற்ற விதத்தில் வீதியில் பயணித்தவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாட்களில் யாழ்.குடாநாட்டில் மூடப்பட்டிருந்த கடைகள், பாடசாலைகள் ,தேவாலயங்களை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.