கொரோனா நோயாளிகள் இருக்கும் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த போலி வைத்தியர் ஒருவர் கொழும்பு மாவட்டத்தின் கெஸ்பேவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹபொல பிரதேசத்தில் வீடொன்றுக்கு வரவழைத்து சந்தேக நபரை கைது செய்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதவியாளர் ஒருவருடன் கொரோனா நோயாளர்களின் வீடுகளுக்கு செல்லும் சந்தேக நபர், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 11 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ரூபா வரையில் கட்டணம் அறவிடுவதாக தெரியவந்துள்ளது.
தனது வீட்டுக்கு வரும் குறித்த நபர் தொடர்பாக சந்தேகம் கொண்ட ஒருவர் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகரிக்கு அறிவித்ததை தொடர்ந்து, சுகாதார அதிகாரி பொலிஸாருடன் இணைந்து சந்தேக நபரை, நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்காக வீடொன்றுக்கு வருமாறு அழைத்து அவரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவருடன் வந்திருந்த உதவியாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொலிஸாரினால் வைத்தியர்களின் இலட்சினையுடனான வாகனமொன்றையும், அந்த வாகனத்தில் இருந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
சுகாதார ஒழுங்குவிதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுக்கவுள்ளனர்.