November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடி வதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தண்டனை அறிவிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது.

துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கெதிரான நடவடிக்கை தொடர்பாக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய பகிடிவதை சம்பவம் ஒன்று இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைப் பிரகாரம், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் 4 பேருக்கு,  ஒரு கல்வி ஆண்டு காலம் கற்பதற்குத் தடை விதிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் குற்றத்தின் பாரதூரத் தன்மை கருதி மாணவி ஒருவருக்குக் கடும் எச்சரிக்கையுடனான விலக்களிப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் இரண்டாவது கூட்டம் நேற்று நடைபெற்ற போது, கடந்த மாதம் 03 ஆம் திகதி சித்த மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பிலான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைக்கமைய தண்டனைக்குரியவர்களுக்கான அறிவித்தல்கள் இன்று துணைவேந்தரால் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில், பல்கலைக்கழகத்தின் சகல பீடாதிபதிகள் பத்துப் பேரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட இரண்டு பேரவை உறுப்பினர்கள், மாணவ ஆலோசகர் ஒருவர், பிரதிச் சட்ட நிறைவேற்று அதிகாரி ஒருவர், போதனைசார் விடுதிக் காப்பாளர்கள் இருவர் உட்பட இருபது பேர் அங்கம் வகிப்பதுடன், பதிவாளரின் நியமனப் பிரதிநிதியாக மாணவர் நலச் சேவைகளுக்கான உதவிப் பதிவாளர், செயலாளராகவும் செயற்படுகின்றனர்.