இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேலும் 12 மாவட்டங்களுக்கு விஸ்தரிக்க உள்ளதாக கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜூன் 8 ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்டுள்ள 12 மாவட்டங்களுக்கும் சினோபார்ம் தடுப்பூசிகள் இவ்வாறு வழங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மாத்தளை, நுவரெலியா, கேகாலை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய மாவட்டங்களில் கொவிட் நோய் தொற்று அதிகம் அடையாளம் காணப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகள் தடுப்பூசி வழங்க முதலில் தெரிவு செய்யப்படும் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் போது கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி உள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார்.