கொவிட் தடுப்பூசி விற்பனை செய்யும் கறுப்பு சந்தை உருவாக்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு மருந்து இறக்குமதியில் ஈடுபடாத பல தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதன் போது தெரிவித்தார்.
எனினும் இவர்களினால் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது, சர்வதேச தடுப்பூசி விற்பனையில் ‘கறுப்புச் சந்தை’ உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்தப்படாத தடுப்பூசிகளை வழங்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை மட்டுமே அரசாங்கம் இதுவரை நாட்டு மக்களுக்கு வழங்கி வருவதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன இதன் போது தெரிவித்தார்.