July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவிலிருந்து இலங்கை வரும் மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

சீனாவின் சினோபார்ம் கொவிட் -19 தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகள் இம்மாதம் முதல் பகுதியில் இலங்கைக்கு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகளின் முதல் தொகுதி ஜூன் 6 ஆம் திகதியும் இரண்டாவது தொகுதி ஜூன் 9 ஆம் திகதியும் இலங்கை வரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் தடுப்பூசியின் 14 மில்லியன் டோஸ்களையும் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’  தடுப்பூசியின் 1 மில்லியன் டோஸ்களையும் கொள்வனவு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் அனுமதி வழங்கியது.

சீனா மார்ச் மாத இறுதியில் 600,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளையும், மே 26 ஆம் திகதி 500,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளையும், நன்கொடையாக வழங்கியது.

இதனிடையே சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 797,205 இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.