இலங்கையில் 20 க்கு அதிகமான சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
15 அம்சக் கோரிக்கையை முன்வைத்தே, இந்த தொழிற்சங்க பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் சுகாதார முன்கள பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என்று சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்கள் குறித்து இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்று அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தாதியினருக்குத் தேவையான தனிப் பாதுகாப்பு கருவிகள் மற்றும் கேஎன் 95 முகக் கவசங்களை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும், 350 க்கு அதிகமான தாதியினர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனைய தொழிற்துறையினரைப் போன்று கருவுற்றுள்ள தாதியினர் மற்றும் சுகாதாரத் துறையினருக்கும் சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.