தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 24 மணித்தியாலங்களில் 1038 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களில் அதிகமானோர் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். இதன்படி அந்த பிரதேசத்தில் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் 130 பேரும், மாத்தறை பிரதேசத்தில் 79 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் அறிவிக்கப்பட்ட 2020 ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் அதனை மீறிய 20,140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நேற்று மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கெமரா தேடுதல் நடவடிக்கையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.