கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் எரிந்த ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பலை ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் கப்பலின் பின் பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக கப்பல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கப்பலின் பின் பகுதி நீரில் மூழ்கி வருவதாகவும் இதனால் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட முன்னர் கப்பல் முழுமையாக கடலுக்குள் மூழ்கி விடலாம் என்றும் கூறப்படுகின்றது.
அவ்வாறு கப்பல் மூழ்குமாக இருந்தால் அதில் உள்ள எரிபொருளால் கடல் வளத்திற்கு மேலும் பாதிப்புகள் ஏற்படக் கூடுமெனவும் கடல் வள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கப்பலை உடனடியாக ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அனர்த்தத்திற்குள்ளான கப்பல் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், அப்படி நிகழ்ந்தால், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதம் அதிகமாகும் எனவும், இதனால் சேதங்களை கட்டுப்படுத்துவதற்காக கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்வது மிகவும் பொருத்தமானது என்றும் கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு கூறியிருந்தனர்.
அதன்படி, தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இதன்படி இன்று காலை அந்தக் கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுத்துச் செல்லும் பணி ஆரம்பமாகியுள்ளது.