February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயலால் வடக்கில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு என்கிறார் கஜேந்திரன் எம்.பி.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயலால் வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகமும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அவர், ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. வடக்கு மாகாணத்துக்கு ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை அரசாங்கம் வழங்கியிருந்தால் இந்தளவு பாரதூரமான விளைவுகளை எமது மாகாணம் சந்தித்திருக்காது. அரசின் பொறுப்பற்ற செயல்களால் தொற்றின் வேகமும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்துள்ளது.

யானைப் பசிக்கு சோளப்பொரி போல் சிறிய அளவிலான கொரோனா தடுப்பு மருந்துகளை யாழ்.குடாநாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டு பெருமளவான ஆட்களை திரட்டி கொரோனாவைப் பரப்பும் வகையில் அரசின் செயற்பாடு காணப்படுகின்றது. மக்கள் நலன் சார்ந்த செயற்பாடாக அது அமையவில்லை.

கொரோனா தடுப்பூசிகளை சுகாதாரப் பிரிவினரிடம் கையளித்திருந்தால் அவர்கள் அதனை சிறப்பாக மக்களுக்கு வழங்கியிருப்பார்கள்.நிலைமைகள் மோசமாக செல்லும்போது அதற்குள் அரசியல் இலாபம் தேடும் முயற்சியே நடைபெறுகின்றது.

தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.அதனை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.நெருக்கடியான நிலையில் மக்களுடைய நலனுக்காக கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டு இருந்தாலும் கூட அதனைப் பொறுப்பாகக் கையாள வேண்டியது முக்கியமாகும். இதனை வைத்தியசாலை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.