November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவு;8,000 கொரோனா நோயாளர்கள் வீடுகளில்!

இலங்கையில் நேற்று (31) மாலை வரை சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,140  என பதிவாகியுள்ள போதிலும் அவர்களில் 8,000 பேர் வரை எந்த ஒரு கொரோனா சிகிச்சை மையங்களோ அல்லது வைத்தியசாலைகளிலோ இல்லாமல் நாட்டின் பல பகுதியிலும் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்களின் தரவுகளை புதுப்பிப்பதில் உள்ள தாமதம், மனித வளங்களின் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் போன்ற குறைபாடுகள் காரணமாக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய பெரும் அளவான கொரோனா நோயாளிகள் வீடுகளில் இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க வீட்டிலேயே நோயாளிகளை கவனித்து கொள்வதற்கு உடனடியாக ஒரு திட்டத்தை நிறுவ வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

நேற்று (31) வரை, 17,502 கொரோனா நோயாளர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் உள்ளனர்.

கிட்டத்தட்ட 6,800 கொரோனா நோயாளர்கள் தனியார் சிகிச்சை மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 94 கொவிட் சிகிச்சை மையங்களும் 93 இடைநிலை சிகிச்சை மையங்களும் இயங்கி வருகின்றன. அவற்றில் மொத்த 23,678 படுக்கைகள் உள்ள போதிலும் 17,583 படுக்கைகள் மட்டுமே நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

6,000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் வெறுமையாக உள்ளன. எனினும் அவற்றை பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளதாக சங்கம் குறிப்பிடுகின்றது.

இதனிடையே, ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 27 ஆம் திகதி 149 ல் இருந்து 4 நாட்களில் 330 ஆக அதிகரித்துள்ளது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நாட்டில் ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 4 நாட்களில் 120 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, சுகாதாரத் துறை எதிர்வரும் நாட்களில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்பதோடு நாட்டில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நோயாளிகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் இன்று (01) 2,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 189,241 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு இன்று கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,631 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 153,371 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளான 34,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இன்று (01) மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,527 ஆக பதிவாகியுள்ளது.