July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பலை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவு!

(Photo: Twitter/India in Sri Lanka)

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தின் போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் கப்பல் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

கடல் சுற்றுச் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில்,தொழில்நுட்ப கருத்தாய்வுகளின் அடிப்படையிலும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழும் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும்படி கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு ஜனாதிபதி உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ள ஜனாதிபதி, கப்பல் விடயத்தில் அரசியலை தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் தலைமை மாலுமி, பொறியியலாளர் மற்றும் உதவி பொறியியலாளர் ஆகியோரை இலங்கையில் இருந்து வெளியேறுவதை  தடை செய்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவு பிறப்பித்திருந்தது.