July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் தலைமை மாலுமி உட்பட மூவருக்கு இலங்கையில் இருந்து வெளியேற தடை

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் தலைமை மாலுமி உட்பட மூவருக்கு இலங்கையில் இருந்து வெளியேறுவதைத் தடை செய்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ விபத்துக்குள்ளான இந்த கப்பலின் பிரதான பொறியியலாளர் மற்றும் உதவி பொறியியலாளர் ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கப்பல் விபத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச தலைமை வழக்கறிஞர் மாதவ தென்னகோன் முன்வைத்த வேண்டுகோளைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பிரியன்த லியனகே, இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தின் சந்தேகநபர்களாக தலைமை மாலுமி, பிரதான பொறியியலாளர் மற்றும் உதவி பொறியியலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேற்படி மூவரையும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு மற்றும் அரச ஆய்வாளர் திணைக்கள அதிகாரிகள் கப்பல் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.