
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிதி உதவியை பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்காக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உதவியில் புனரமைக்கப்பட்ட பலாலி விமான விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டு 2019 அக்கோடபர் 17 ஆம் திகதி அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சென்னைக்கும் பலாலிக்கும் இடையே விமான சேவைகள் இடம்பெற்றதுடன், பின்னர் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ள இலங்கை அரசாங்கம், அதற்காக இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுகொள்ள தீர்மானித்துள்ளது.