May 29, 2025 5:52:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான சட்டரீதியான நிலைமை குறித்து ஆராய்வு!

நாட்டில் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான சட்டரீதியிலான நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (01) காலை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கான அதிக கேள்வி மற்றும் நாளாந்தம் அவற்றின் விலையில் ஏற்படுகின்ற அதிகரிப்பு காரணமாக, இந்த தடுப்பூசிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று இந்த கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் 6 மில்லியன் தடுப்பூசிகளையும், செப்டம்பர் மாதத்திற்குள்  7 மில்லியன் தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்வதற்கான திறன் இருப்பதாகவும் இந்தக் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான சட்டரீதியிலான ஒப்பந்தங்கள் எவ்வாறு வரையப்பட வேண்டும் என்பதில் சட்டமா அதிபர் திணைக்களமும், சட்ட வரைவுத் துறையும் கவனம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீன – இலங்கை கூட்டு முயற்சியாக எதிர்வரும் இரண்டு மாதங்களில் கொரோனா தடுப்பூசியை நாட்டில் உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

அத்துடன், சினோவெக் கொரோனா தடுப்பூசியை நாட்டில் உற்பத்தி செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் கண்டி – குண்டசாலை பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.