January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வரும் பயணிகளுக்கு கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள்!

இலங்கையில் இன்று (01) முதல் சர்வதேச விமான சேவைகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுக்கு வரும் பயணிகள் கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

அதன்படி, இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய  14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்தார்.

நாட்டுக்குள் வரும் பயணிகள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அத்தோடு அவர்கள் இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்ததும் மீண்டும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க கூறினார்.

அதனை தொடர்ந்து அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவதுடன்,  சுமார் 10 நாட்களின் பின்னர்  மற்றொரு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் போது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இன்று முதல் சர்வதேச விமான நிலையங்கள் மீள திறக்கப்படவுள்ள போதிலும் கடந்த 14 நாட்களாக வியட்நாமிற்கு சென்று திரும்பியவர்கள் மற்றும் வியட்நாமில் உள்ளவர்கள் தற்காலிகமாக இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (01) அதிகாலை கட்டாரிலிருந்து இரு விமானங்கள் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட மொத்தம் 53 பேர் இன்று அதிகாலை  02.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு, தோஹாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்  நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில்  அதிகாலை 04.05 மணிக்கு 116 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை வரும் விமானமொன்றில் ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாவும் சிவில் விமான சேவைகள் அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.