
இலங்கையில் தட்டுப்பாடாக உள்ள ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை எந்த விலை கொடுத்தாவது பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் முதலாவது டோஸாக ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 600,000 பேர் தங்களது 2 வது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பதால், அதனை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை அதிகளவில் வைத்திருக்கும் பல நாடுகளுடனும், தனியார் நிறுவனங்களுடனும் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள போதும் இதுவரை உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
எனினும் தடுப்பூசிகளை மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்து ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அதற்கு அனுமதி இல்லை என தெரிய வந்துள்ளதாக இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் 600,000 டோஸ் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியுமானால் அதற்காக ஒரு தனி விமானத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.