February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அறிகுறியற்ற தொற்றாளர்கள் 10 நாட்களின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்’

நாட்டில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களிடையே அறிகுறி அற்ற தொற்றாளர்கள் 10 நாட்களின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இவ்வாறு அறிகுறி அற்றவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும் போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாது எனவும் அவர் கூறினார்.

ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு 6 நாட்களின் பின்னர், அவருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட வில்லையென்றால் அவரிடமிருந்து கொவிட் வைரஸ் பரவல் அடையாது எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 நாட்களுக்கு மேலும் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் கொரோனா பரிசோதனையின்றி சிகிச்சை மையங்களில் வீடுகளுக்கு அனுப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பப்படுபவர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.

அத்தோடு கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரிடம் 14 நாட்களின் பின் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் அவருக்கு  தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவரின் உடலில் வைரஸின் இறந்த கலங்கள் இருக்கலாம். எனினும் இதனால் ஏனையோருக்கு தொற்று பரவாது.

எனவே, இந்த காலப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை செய்வது அவசியமற்றது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.