July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ தீ விபத்தினால் சுற்றுலாத்துறை கேள்விக்குறியாகியுள்ளது”; அஜித் நிவார்ட் கப்ரால்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் தீப்பரவி விபத்துக்குள்ளாகிய ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலினால் நாட்டின் தேசிய பொருளதாரத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக நிதி முதலீட்டு இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் சுற்றுலாத்துறையும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கடற்பரப்பில் சர்வதேச கப்பல்கள் விபத்துக்குள்ளாவதும், அதனால் கடல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதும் இது முதல் தடவையல்ல.

உண்மையில் இக்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு ஒப்பீட்டளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.

ஏற்கனவே கொரோனா வைரஸினால் வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலாத்துறை இந்த தீ விபத்தினால் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அண்மையில் கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகிய கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினை விட ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பன்மடங்காகும். ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் இதர துறைசார் பாதிப்புகளை தற்போதைய சூழ்நிலையில் மதிப்பீடு செய்ய முடியாத தன்மை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.