முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்கத்தால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு வரும் 250 ரூபா மாதாந்த கொடுப்பனவை, அடையாளங் காணப்படும் குறிகாட்டிகளுக்கமைய தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2021 ஜூன் முதலாம் திகதி முதல் (இன்று) தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்’ கொள்கைப் பிரகடனத்திற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களை மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
இதன்படி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுக்கு நிரந்தர கொடுப்பனவை வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.