(FilePhoto)
வவுனியா மற்றும் மன்னாரில் கொவிட் -19 வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக நிதி அறவிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய முன்று மாவட்டங்களிலும் கொவிட்-19 வைரஸின் நோய் தாக்கத்திற்குள்ளாகி இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு வவுனியா நகர சபையினால் நிதி அறவிடப்படுகிறது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் கொரோனா தாக்கத்திற்குள்ளாகி இறப்பவர்களை தகனம் செய்யும் இடமாக வவுனியா மாவட்டம் அமைந்துள்ளது.
இந்நிலையில், வவுனியா நகரசபையானது ஒருவரை தகனம் செய்ய 7,000 ரூபா அறவிட்டு வருவதாகவும் இன்றைய கடினமான சூழலில் வாழும் மக்களுக்கு இந்த தொகையினை வழங்குதல் என்பது இலகுவான காரியமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் செல்வம் எம்.பி. பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.