November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் டோஸை மட்டும் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சே சம்மதம் கோரியது’: அமைச்சர் கெஹெலிய

கண்டியில் ஸ்புட்னிக்- வி தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஒரு டோஸை மாத்திரம் பெற்றுக்கொள்ள சம்மதம் கோரியதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரம் பெற்றுக்கொள்வதை சம்மதித்து, கையொப்பம் கோரியது சுகாதார அமைச்சின் தீர்மானமாகும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் விசேட நிபுணர் குழுவின் ஆலோசனைகளுக்கு அமையவே தடுப்பூசி பெற்றுக்கொள்ள வந்தவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்பூட்னிக்- வி தடுப்பூசி முதல் டோஸ் மட்டுமே என்றாலும், அதைப் பெற விரும்புகிறேன்” எனக் குறிப்பிடப்பட்ட பத்திரமொன்றில் பொதுமக்களிடம் கையொப்பம் கோரியதில், இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்புட்னிட் தடுப்பூசியின் முதலாவது டோஸை மாத்திரம் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு இவ்விடயம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.