November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அச்சுறுத்தல் விடுத்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால் மட்டு.பொது சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஷ்கரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை அச்சுறுத்திய செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (01) முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மட்டக்களப்பு  பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஊடக சந்திப்பொன்று இன்று (01) இடம்பெற்றபோதே அதன் தலைவர் சிவசேகரம் சிவகாந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றி வரும் சுகாதார பரிசோதகர்களை அச்சுறுத்தியதால் மறு அறிவித்தல் வரை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதி பிரதேசத்தில் கடமையாற்றிவரும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது அவருக்கு வந்த தொலைபேசி மூலம் தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்பான முழு விபரங்களும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவரை கைது செய்ததாகவோ அதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவோ எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

மேலும், மிகவும் அர்ப்பணிப்புடன் கொவிட் கட்டுப்பாடு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு இந்த சம்பவம் மிகவும் வேதனையை தந்துள்ளதுடன்,பொது மக்களுக்கு எமது சேவையினை வழங்க முடியாமல் போவதையிட்டு மிகவும் கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கும் வேளையில் கடமைக்கு செல்வது எமக்கு பாதுகாப்பான சூழலாக அமையவில்லை.இது எமது மாவட்டத்தின் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடும் எமது கடமைகளை தாமதப்படுத்துவதாக இருக்கின்றது.

எனவே இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுத்து எமது பணியினை தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.

இதேவேளை, கொவிட் சம்பந்தமான சகல நடவடிக்கைகளிலும் இருந்து நாங்கள் இன்றிலிருந்து விலகிக்கொள்வதுடன், எமது வழமையான கடமைகள் நடைபெறும் என்பதையும் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.