February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பில்லாமல் பேசுகின்றார்; சுமந்திரன் குற்றச்சாட்டு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வெடிப்புக்கு உள்ளானதன் தாக்கமானது இன்னும் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மீன் வளமும் பாதிக்கப்படும் என்கின்றனர். அவ்வாறு இருக்கையில் மக்கள் கடல் உணவுகளை உண்ணலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பில்லாமல் கருத்தொன்றை கூறியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை இலங்கை எல்லைக்குள் அனுமதித்தது யார் என்பதே கேள்வியாகும். இந்த கப்பல் வெடிப்புக்கு உள்ளானதில் தற்போது கடல் சூழல் நாசமாக்கப்பட்டுள்ளது.இதன் தாக்கம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.மீன் வளமும் பாதிக்கப்படும் என்கின்றனர். இந்தியா, கத்தார் ஆகிய நாடுகள் நிராகரித்த கப்பலை யார் இங்கே கொண்டுவர அனுமதித்தது.

மோசமான இரசாயன திரவியங்களை கொண்டுவந்த கப்பலை நாட்டுக்குள் அனுமதித்த ஒரே தவறே இன்று மோசமான விளைவுகள் ஏற்பட காரணமாகும். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக சூழலுக்கு, மீன் இனங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீன்களை உண்ணலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.குறித்த கடல் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்களின் ஆடைகளை கவனியுங்கள்.அவர்கள் எவ்வாறான ஆடைகளை அணிந்துள்ளனர் என்பதை பார்த்தாலே தெரிகிறது நிலைமை எவ்வாறென்பது.

அவ்வாறு இருக்கையில் மீனவர்கள் எவ்வாறு கடலுக்கு செல்வது என்ற கேள்வி எழுகின்றதல்லவா. ஆகவே அமைச்சர் பொறுப்பில்லாது பேசுகின்றார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.