January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் -19 கொத்தணிகள் மீண்டும் உருவாகலாம்; சுகாதார தரப்பினர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு இரு வார காலம் முடக்கப்பட்டாலும் கூட நாட்டின் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது. மக்களின் நடமாட்டத்திற்கு அனுமதித்தால் மீண்டும் கொத்தணிகள் உருவாகும் அச்சுறுத்தல் உள்ளதாக சுகாதார நிபுணர்களும், வைத்தியர்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் அவசர சிகிச்சை பிரிவுகளை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இருவார காலத்தில் இதனை உருவாக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வாராந்த கொவிட் -19 ஆய்வு கூட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் நாட்டின் மோசமான கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த ஆய்வொன்றை சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளனர்.

அதற்கமைய நாடு தற்போது முடக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் வைரஸ் பரவல் குறைந்துள்ளதாக கருத முடியாது. எனவே மக்களின் நடமாட்டம், அனாவசிய செயற்பாடுகள் காரணமாக மீண்டும் நாட்டில் கொவிட் -19 கொத்தணிகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார தரப்பினர் அரசாங்கத்திற்கு எடுத்துரைத்துள்ளனர்.

நாட்டை தொடர்ச்சியாக முடக்குவது அல்லது சகலருக்கும் தடுப்பூசிகளை ஏற்றுவது ஆகிய இரண்டு செயற்பாடுகளில் ஒன்றை கையாள வேண்டும் என்பதையும் எடுத்து கூறியுள்ளனர்.

அயல் நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேலாக நாடு முழுமையாக முடக்கப்பட்டது.அதன் பின்னர் மீண்டும் நாடு திறக்கப்பட்ட பின்னர் இன்று உலகிலேயே அதிக கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நாடாக இந்தியா மாறியுள்ளது.

எனவே நாட்டினை முடக்குவதால் மாத்திரம் கொவிட் -19 வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்க முடியாது என்ற காரணிகளையும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் எடுத்து கூறியுள்ளனர். இந்நிலையில் நாட்டில் சகல மாவட்டங்களிலும் அவசர சிகிச்சை பிரிவுகளை உருவாக்க வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவை உருவாக்கி கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹன எடுத்து கூறியுள்ளார்.

மேலும் தற்போதுள்ள நிலை தொடருமாயின் அடுத்த மாத நடுப்பகுதியில் அல்லது இறுதியில் நாளொன்றுக்கான தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டலாம்.எனவே இப்போதே சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாட்டினை பாதுகாக்க ஏதுவாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து கவனம் செலுத்துவதாகவும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவை உருவாக்கி பொதுமக்களுக்கான சிகிச்சைகளை வழங்கும் சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார,வைத்திய நிபுணர்களிடம் தெரிவித்துள்ளார்.