January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாது”; மக்கள் பீதியடையத் தேவையில்லை என்கிறது இலங்கை உப்பு உற்பத்தி நிறுவனம்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து வெளியான கழிவுகள் காரணமாக இலங்கையின் கடல் வளத்திற்கு பாரிய தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், எரிந்த கப்பலிலிருந்து கடல்நீரில் பல்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், அது இலங்கையில் உப்பு உற்பத்திக்கு தடையாக அமையாது என்று இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த சந்தபரன தெரிவித்துள்ளார்.

நாட்டில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

நாட்டின் ஒரு பகுதி கடற்பரப்பு மாசடைந்துள்ள நிலையில், உப்பு உற்பத்தியை இது பாதிக்கும் என பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக அதிக உப்பு பாக்கெட்டுகளை வாங்கி சேமித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தேவையற்ற விதத்தில் உப்பை வங்கி சேமிப்பது உப்பின் விலையை அதிகரிக்க காரணமாகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடல் நீரில் எந்த ஒரு இரசாயனம் கலக்கப்பட்டாலும் அது உப்பு உற்பத்திக்கு தடையாகாது. உப்பு உற்பத்தியின் போது தேவையற்ற இரசாயனங்கள் அனைத்தும் அதிக வெப்பத்தால் ஆவியாகி அகற்றப்பட்டு விடுவதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு ஆவியானதன் பின்பு மீதமுள்ள சோடியம் குளோரைட் மட்டுமே உப்பு தயாரிக்க பயன்படுகிறது.இதனால் மனித நுகர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இப்போதும் கடல் நீரில் பலவிதமான ரசாயனங்கள் உள்ளன. இந்த கப்பலின் கழிவுகள் மட்டுமல்லாமல், பிற வழிகளிலும் கடல் நீரில் பல்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன என இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த சந்தபரன கூறியுள்ளார்.