முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் கொழும்பு, புத்தளம் மற்றும் மன்னாரில் உள்ள அவரின் வீடுகளில் தேடுதல் நடத்திய போதும் அவரை கைது செய்ய முடியாது போயுள்ளது.
அவர் தலைமறைவாகியிருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில் அவரால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாதவாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட்டை கைது செய்ய முடியாமையினால் அவரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரிஷாட் பதியுதீனின் தலைமறைவாகுவதற்கு உதவியதாக தெரிவித்தே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக பதவி வகித்த ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி தேர்தலின் போது 222 பஸ்களை பயன்படுத்தி புத்தளத்தில் இருக்கும் வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றவேளையில் அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை அடிப்படையாக கொண்டு அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கமைய நேற்று இரவு ரிஷாட்டின் வீடுகளுக்கு விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதும் அவர் வீடுகளில் இருக்கவில்லை. இதனால் அவரை கைது செய்ய முடியாது போயுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.