July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் பயணக்கட்டுப்பாட்டில் இருக்கும்போது நாமல் ராஜபக்‌ஷவுக்கு மட்டும் எவ்வாறு தளர்த்தப்பட்டது?

இலங்கை முழுவதும் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் வேளையில், அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவிற்கு மாத்திரம் எவ்வாறு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சரான நாமலுக்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்றும் சுமந்திரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், நாட்டில் எவருக்குமே வீதிகளில் செல்ல முடியாது என கூறப்படுகின்ற வேளையில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவிற்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லையா என்பதை அரசாங்கத்திடம் கேட்கிறேன்.

நாளாந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில் இவர் மாத்திரம் நடமாடுவது அனுமதிக்கப்படக்கூடியதா? விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற காரணி குறித்து எந்தவித அறிவிப்பும் எமக்கு கிடைக்கவில்லை.

உண்மையில் இப்போதுள்ள நாட்டின் நிலைமையில் வாகனங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமா என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது.

மக்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்கவே முடியாத நிலையில், வாகனம் கொள்வனவு எதற்கு. சாதாரண சூழலில் இவற்றை செய்வதில் எங்கள் மத்தியில் எதிர்ப்பில்லை.ஆனால் இப்போது அவசியமில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.