ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (31) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்தக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை.
எனினும், தேசிய ரீதியாக பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில், அக்கட்சிக்கு ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தது.
எனினும், தேர்தல் நிறைவடைந்து ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், தற்போது அந்த தேசியப் பட்டியலுக்கான உறுப்பினரை ஐக்கிய தேசியக் கட்சி இன்று கூடிய செயற்குழு கூட்டத்தின் போது தெரிவு செய்துள்ளது.
இதன்படி, ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடும் ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்த கட்சியின் தவிசாளர் தெரிவித்தார்.