நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை பயணக்கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்புகள் இன்னும் குறைவடையாத நிலையில், தற்போது அமுலில் உள்ள பயணத்தை மற்றும் ஏனைய சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் அவ்வாறே பேணப்பட வேண்டும் எனவும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள போதும் நாட்டின் நலன் கருதி இதனை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்குமானால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்வடையக் கூடும்.அத்தோடு சுகாதாரத் துறையும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என அவர் கூறினார்.
கொரோனா தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஜூன் 07 ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.