
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலிலிருந்து வெளியான இரசாயன கழிவுகள் நீர் கொழும்பு முதல் மன்னார் வரையிலான கடற்பரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்பில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கழிவுகளில் கதிரியக்க பொருட்கள் இருக்கலாம் என்ற அச்சமும் வெளியிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து வெளியான கழிவுகளில் கதிரியக்க பொருள் இல்லை என அணுசக்தி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
கப்பலிலிருந்து வெளியான கழிவுகள் அதிகமாக கலந்துள்ள உஸ்வெடகெய்யாவ கடற்கரையின் பல இடங்களில் வெளிப்புற கதிர்வீச்சு அளவிடப்பட்டதாக அணுசக்தி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
குறித்த கடற்பரப்பிலிருந்து குப்பைகள், பிளாஸ்டிக் துகள்கள், மணல் மற்றும் அசுத்தமான கடல் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் அவற்றில் கதிர்வீச்சை ஏற்படுத்தக்கூய எந்த பொருளும் அடையாளாம் காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
எனினும் கப்பலில் இருந்த பிளாஸ்டிக் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கடலில் தற்போது கலந்துள்ளதால் அது நாட்டைச் சூழவுள்ள முழு சமுத்திரத்துக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.பத்மலால் தெரிவித்துள்ளார்.