July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பம்; வியட்நாமில் இருந்து பயணிகள் வரத் தடை!

இலங்கையில் நாளை ஜூன் 1 ஆம் திகதி முதல் சர்வதேச விமான நிலையங்கள் மீள திறக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்தார்.

எனினும் கடந்த 14 நாட்களாக வியட்நாமிற்கு சென்று திரும்பியவர்கள் மற்றும் வியட்நாமில் உள்ளவர்கள் தற்காலிகமாக இலங்கை வருவதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க மேலும் தெரிவித்தார்.

வியட்நாமில், தீவிரமாக பரவும் கொரோனா வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை வரும் பயணிகள் முன்னர் அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய நாட்டுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

அத்தோடு, இலங்கை வரும் விமானமொன்றில் ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து வழமையான சேவைகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கைக்கு வர முடியாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சில தினங்களுக்கு முன்  தெரிவித்திருந்தார்.

நாளை (01) முதல் வெளிநாடுகளில் பணிபுரியும், தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியன திறக்கப்படும். ஆனால் பலாலி, இரத்மலானை விமான நிலையங்களுக்கு இடையிலான உள்ளக விமான சேவைகள் முன்னெடுக்கப்படாது எனவும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டிருந்தார்.