July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கப்பல் தீப்பிடித்த விவகாரம்; கப்டன் உள்ளிட்ட குழுவினரிடம் வாக்குமூலம் பதிவு!

கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவலுக்குள்ளான ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் கப்டன் உள்ளிட்ட குழுவினரிடம் இன்று (31) வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கடந்த 23 ஆம் திகதி துறைமுக பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தேசிய கொடியுடன் இந்தியாவிலிருந்து பயணித்த குறித்த  கப்பல் கொழும்பு  துறைமுகத்தில் கடந்த 19 ஆம் திகதி இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில், தீப்பரவலுக்குள்ளான ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் கப்டன் மற்றும் 25 பேர் கொண்ட குழுவினர் கடற்படையினால்  மீட்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி, குறித்த குழுவினரின் தனிமைப்படுத்தல் காலம் நேற்றுடன் (30) நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பான விசாரணையை முன்னெடுக்க 10 அதிகாரிகள் கொண்ட குற்றப்புலனாய்வு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணை வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தற்போது, கப்டன் உள்ளிட்ட குழுவினரிடம்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.