January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண அதிகார பறிப்புக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம்; சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாணங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக எதேச்சாதிகாரமாக பறிக்கப்படும் போக்கை அனைத்து அரசியல் தலைமைகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

மாகாண பாடசாலைகளை தரம் உயர்த்தல் என்ற போர்வையில் மத்திய அரசு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றி வருகின்றது. இந்தப் போக்கு கண்டனத்துக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என்று தெரிவித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையின் முழு விபரம் வருமாறு:-

“கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நடந்துவரும் அறவழிப்போராட்டமும் ஆயுதப் போராட்டமும் அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய சகல கட்சிகளும் சமஷ்டி அரசியல் அமைப்பு முறையிலான அதிகாரபகிர்வு பற்றியே பேசி வருகின்றனர். ஆனால், ஏற்கனவே கிடைத்திருக்கக்கூடிய அற்ப சொற்ப அதிகாரப் பரவலாக்கத்தை பின்கதவு வழியாக அரசு பறித்தெடுக்கின்றபோது, இதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டும் காணாமல் மௌனித்துப் போயிருக்கின்றார்கள். அரசுக்கு ஆதரவளிக்கும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசு மாகாணங்களுக்குரித்தான அதிகாரங்களைப் பறித்தெடுப்பதை ஆதரித்து நிற்கின்றார்கள். இந்தக் கேவலமான நிலை மாறவேண்டும் என்பதை தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பாடசாலைக் கல்வி என்பது மாகாணங்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களாக இருக்கின்றபோதிலும், மத்திய அரசானது அவ்வப்போது மாகாணப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக சுவீகரித்துக்கொள்கின்றது. மாகாணப் பாடசாலைகள், தேசிய பாடசாலைகள் என்னும் இரண்டு விதமான முறைமையை இலங்கை அரசு ஏற்படுத்திக்கொண்டுள்ளபோதிலும், மாகாணப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுகின்றபோது, அதற்கான எந்த வரைமுறைகளும் இல்லாமல் அரசியல் நோக்கங்களுக்காகவும் அதிகாரப் பகிர்வை நிராகரிக்கின்ற போக்கிலும் மத்திய அரசு திட்டமிட்டு இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையை பொறுத்தவரையில் தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் இடையில் பெயர்ப்பலகையை தவிர, பாடவிதானங்கள் தொடர்பாகவோ அல்லது பரீட்சைகள் தொடர்பாகவோ எந்தவிதமான மாற்றங்களும் வேறுபாடும் இல்லை. ஜி.சீ. சாதாரண தரப் பரீட்சையோ அல்லது உயர்தரப் பரீட்சையோ நாடு முழுவதிலும் ஒரே கேள்வித்தாள் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றது.

பரீட்சைப் பெறுபேறுகளை பொறுத்தவரையில், தேசிய பாடசாலைகள் என்பதையும்விட, வசதிகள் குறைந்த பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மாகாண பாடசாலைகளின் அடைவு மட்டம் அதிகமாகவே இருக்கிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தேசிய பாடசாலைகள் என்பது ஒரு தரம் உயர்ந்த பாடசாலைகளைப் போன்ற ஒரு மாயையை உருவாக்கி, மாகாணங்களில் சிறப்பான முறையில் இயங்கிவரும் பாடசாலைகளை மத்திய அரசு சுவீகரித்துக் கொள்வதானது அதிகாரப் பகிர்விற்கு எதிரான ஒரு செயற்பாடு என்பதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசிடமிருந்து மாகாண பாடசாலைகளுக்குக் கூடுதலான வசதி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதனை தேசிய பாடசாலையாக மாற்றுவதை விடுத்து, மாகாண பாடசாலைகளுக்கான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொடுப்பதனூடாக மாகாணத்துக்குட்பட்ட பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை தேசிய பாடசாலையாக மாற்றத் துடிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக அதிகாரப் பகிர்வுக்காகப் போராடி வருகின்ற தேசிய சிறுபான்மை இனத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தற்போதைய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் போன்றோர் தேசிய பாடசாலைகள் என்பது தரம் உயர்ந்த பாடசாலை என்பது போன்றதொரு பொய்யான தோற்றப்பாட்டைக் காட்டி மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பேசக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

மாகாண சபை அனைத்தும் கலைக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண சபைகளுடைய ஒப்புதல் இல்லாமல் மாகாணத்துக்கு உரித்தான அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தைப் பாதுகாப்போம் என்று பொதுவெளியில் பேசுபவர்கள் குறைந்தபட்சம் இவற்றைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நிலைமைகள் இவ்வாறிருக்க, பல இலட்சம் மக்களின் உயிரிழப்புகள், பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்திழப்புகள் இவையெல்லாம் ஏன் நடந்தது என்பதை தமிழ் புத்திஜீவிகளும், அரச அதிகாரிகளும் பாடசாலை ஆசிரியர்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது போராட்டம் தொடர்பில் சரியான புரிதல் இருக்குமாக இருந்தால், மாகாணப் பாடசாலைகளை மத்திய அரசுக்குக் கொடுப்பதற்கு இவர்கள் போட்டாபோட்டி போட்டு முன்வரமாட்டார்கள். தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய அரசியல் அறிஞர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த அதிகாரப் பகிர்வு என்னும் தத்துவத்தை தமிழ் மக்களுக்குப் புரிய வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்று கருதுகின்றோம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான செயற்பாடுகளைக் கூர்ந்து அவதானிப்பது மிகமிக அவசியம் என்பதை பாடசாலைகள் கபளீகரம் செய்யப்படும் செயற்பாடு துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி முடிக்கும்வரை அதற்குரிய அதிகாரங்களை எந்த விதத்திலும் மீளப்பெற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசையும் வலியுறுத்துகின்றோம்.