July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான பயண தடையை நீடித்தது இத்தாலி!

தீவிரமாக பரவலடையும் கொரோனா புதிய வைரஸ் தொற்று அபாயம் காரணமாக இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு பயணத்தடையை மேலும் நீடிப்பதாக இத்தாலி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில், விதிக்கப்பட்ட பயணத்தடை இன்றுடன் (30) முடிவடையும் நிலையில் ஜூன் 21 ஆம் திகதிவரை பயணத்தடையை நீடித்துள்ளதாக இத்தாலியின் சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார்.

இந்த பயணக்கட்டுப்பாட்டு விதிகளின் படி, இத்தாலியில் நிரந்தரமாக வாழும் இத்தாலிய குடியுரிமை உள்ளவர்களும் முன்னதாக இத்தாலியில் வசிக்கும் வெளிநாட்டினரும் மட்டுமே மூன்று நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு மூன்று நாடுகளில் ஒன்றிலிருந்தும் இத்தாலிக்கு பயணிப்பவர்கள் எவரும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே கொரோனா தொற்று பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்தோடு இத்தாலி சென்றதும் இன்னொரு கொரோனா சோதனையை செய்து கொள்ள வேண்டும். பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்பு மூன்றாவது சோதனை செய்து கொள்ள வேண்டும்.

கடந்த 14 நாட்களுக்குள் இந்த நாடுகளிலிருந்து இத்தாலிக்கு வந்தவர்கள், அல்லது இந்த நாடுகளின் ஊடாக பயணித்தவர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

கொரோனா வைரஸின் பி .1.617 என்ற புதிய வகை சமீப காலமாக தெற்காசிய நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்த வாரம், வெளியிட்ட அறிக்கைகளின் படி, இந்த புதியவகை வைரஸ் 53  நாடுகளுக்கு பரவியுள்ளது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.