கொழும்பு நகரில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
ஹிரு செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழுப்பில் இரண்டாவது அலையின் போது, ஏற்பட்டது போன்று கொரோனா தொற்று பரவல் இப்போது இல்லை என ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகமாக பதிவான கொழும்பின் பல பகுதிகளில் அதிகமானவர்களுக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டதன் காரணமாகவே கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழுப்பில் தடுப்பூசி பெற்று கொண்டவர்களின் குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொவிஷீல்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பெற்று கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்குவதில் தட்டுப்பாடு குறித்து கேட்கப்பட்டபோது, இன்னமும் 102,000 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர்களுக்கான தடுப்பூசி வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எனினும் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் அத்தியாவசிய சேவை பிரிவுகளில் முதலாவது டோஸாக கொவிஷீல்ட் தடுப்பூசி பெற்று கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தற்போது தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கொவிஷீல்ட் தடுப்பூசியின் 2 ஆவது டோஸூக்காக பெரும் தொகையான பொதுமக்கள் காத்திருக்கும் போது அரச அதிகாரிகளுக்கு வழங்குவது குறித்து அவரிடம் வினவியபோது, அத்தியாவசிய சேவைகள் நாட்டுக்கு இன்றியமையாதவை. எனவே அவர்களுக்கு கையிருப்புள்ள தடுப்பூசிகள் 2 வது டோஸாக வழங்கப்பட்டு வருவதாகவும் ருவான் விஜயமுனி குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் தடுப்பூசி திட்டத்தில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி கோரிக்கைகளை முன்வைத்த போதும் மொரட்டுவையில் ஏற்பட்டதை போன்று தடுப்பூசி ஏற்றுவதில் முறைகேடு இடம்பெற தாம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.