November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு நாமல் ராஜபக்‌ஷ உத்தரவு

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ, பொது மக்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

அந்த வகையில் யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையங்களான அரியாலை பிரப்பன்குளம், மகா மாரியம்மன் திருமண மண்டபம், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம், கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை கரவெட்டி பகுதிகளில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடியதுடன், தடுப்பூசி நிலையங்களை பார்வையிட்ட பின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் மேற்படி தடுப்பூசி அடுத்த கட்டமாக வழங்கப்படவுள்ளதன் காரணமாக முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில்  தடுப்பூசிகளை விரைவாக மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காத விடத்து அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களினை அதிகரித்து மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து விரைவில் அரசினால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்குமாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.