July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி திட்டத்தில் மோசடியா?; அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

அரசாங்கம் கொரோனா தடுப்பூசியை ஒரு வியாபாரமாக்கியுள்ளதாகவும் தமது தரப்பில் உள்ளவர்களின் உயிரை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்தோடு சினோபார்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சினோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் என்ற அடிப்படையில் 14 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவையில் அனுமதி பெற்று கொண்டுள்ள போதிலும் பங்களாதேஷ் குறித்த தடுப்பூசியை 10 டொலர்களுக்கு பெற்று கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் படி குறித்த தடுப்பூசி கொள்வனவின் போது 70 மில்லியன் டொலர்கள் மோசடி இடம் பெற்றுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம் முதலே ஒழுங்காக முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 60 வீதமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமானால் நாட்டுக்கு மொத்தமாக 30 மில்லியன் (3 கோடி ) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படும் நிலையில், அரசு கடந்த 5 மாதங்களில் 3 மில்லியன் தடுப்பூசிகளை மட்டுமே பெற்று கொண்டுள்ளது.

இதன்படி நாட்டுக்கு மேலும் 27  மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கிடைக்கும் சிறிய அளவு தடுப்பூசிகளையும் அரசாங்கத்தில் உள்ள சிலர் தமது பதவி பலத்தை பயன்படுத்தி தமக்கு  தேவையானவர்களுக்கு பெற்று கொடுத்துவரும் நிலையில் பொதுமக்களே தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கு அமைய நாட்டு மக்களிடையே 10 வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனினும் இலங்கையில் அந்த பரிந்துரை மீறப்பட்டுள்ளது என சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

இலங்கையில் இதற்கு முன்னர் தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்கள் இன்று நாடு முழுவதும் தடுப்பூசி தேடி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தடுப்பூசி வழங்கும் கோட்பாடுகளை மீறி அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. மக்களின் உயிரை விசேடமானவர்கள் மற்றும் முக்கியமற்றவர்கள் என தரம் பிரிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறித்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.