யாழ். மாவட்டத்தின் 61 கிராம சேவகர் பிரிவுகளில் நாளை முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்ட 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த, அனைவருக்கும் தடுப்பூசி நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினாலும், பிரதேச செயலகத்தாலும் இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன.
அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட நிலையத்தில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறும் ஆ. கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் பதிவு செய்துள்ள கிராம சேவகர் பிரிவு தவிர்ந்த வேறு பிரிவுகளில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.