கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பல தனியார் மருத்துவ மனைகள் நியாயமற்ற விதத்தில் கட்டணங்களை வசூலிப்பதாக மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறான வைத்தியசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற போது தாம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததாக சுட்டிக்காட்டியுள்ள அவர், பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேச உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு எந்த சிகிச்சையும் வழங்கப்படாத போதும் அவர்களிடம் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது பெரும் தொகை கட்டணம் அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்கள் நோய் குணமடைந்தவர்களை மருத்துவமனையை விட்டு வெளியேற பரிந்துரைக்கும் போதிலும், சில தனியார் மருத்துவமனைகள் பல்வேறு காரணங்களை காட்டி நோயாளிகளை பல நாட்கள் நிறுத்தி வைத்திருப்பதாகவும் அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
சில தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற மோசடி செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு கடுமையான நோய்த் தொற்றுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், மக்களை நெருக்கடிக்கு இட்டுச்செல்ல முயற்சிக்கும் இவ்வாறான தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் கேட்டு கொண்டுள்ளார்.